Wednesday, October 24, 2007

கல்யாணசுந்தரம் - 7


<>பா(ப)ட்டுக்கோட்டை

கல்யாணசுந்தரம்!<>

மனோன்மணியம் சுந்தரப் பிள்ளையின்
எண்ண அதிர்வுகளை,

" நாங்க பொறந்த தமிழ்நாடு - இது
நான்கு மொழிகளின்தாய் வீடு!
ஓங்கி வளரும் கலையைத் தலையிலே
தாங்கிவளரும் திரு நாடு! என்று கர்வமாகச் சொல்லி
பெருமை கொள்ளுகிறார்.

" ஓரோண் ஒண்ணு - உள்ள தெய்வம் ஒன்று;
ஈரோன் ரெண்டு - ஆண் பெண் ஜாதி ரெண்டு;
மூவொண் மூனு -முத்தமிழ் மூனு,
நாலொண் நாலு - நன்னிலம் நாலு..." என்கிற
எளிய பாலர் பாடத்தை பாட்டாகத் தந்த

சிவப்புச் சூரியன், பட்டுக்கோட்டையார்.

" எந்த நாடும் இதற்கீடில்லை என்றே என்
சொந்த நாட்டைச் சொர்க்கமாக்கிடுவேன்" என்று
தன்னம்பிக்கையோடு சூளுரைக்கிறார். "

பெற்ற தாயின் புகழும், பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேண்டும்! " என்று
தேசப்பற்றைத் தெளிக்கிறார்.

இளைய சமுதாயத்துக்கு...

இளைய சமுதாயம்தான் நாளைய
வரலாறு சமைக்கப்போகிற நல்ல
உள்ளங்கள் என்பதை உணர்ந்த மக்கள் கவிஞர்,

" ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி..." என்று
சமூகத்துக்கு தூண்டில் போடுகிறார்.

நாளைய வரலாற்றுக்கு வித்தாக
வளருகிற சின்னப்பையனுக்குச்
சேதி சொல்லுகிறார்,

" சின்னப்பயலே, சின்னப்பயலே
சேதிகேளடா..." என்று சொல்லும்போது கூட,
அவன் வாழ்கிற ஊர் என்கிற சின்னச்
சிமிழுக்குள் அடைத்துவிடாமல்,

" மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா - தம்பி வளர்ந்து வரும்
உலகத்துக்கே - நீ வலது கையடா... புரிந்து
நடந்துகொள்ளடா - தம்பி தெரிந்து
நடந்துகொள்ளடா" என்று பரந்து விரிந்த
உலகை நோக்கிச் சிறகு விரிக்கச் சொல்லுகிறார்.

இப்படிப்பட்ட பொருள் மிக்க பாடல்களால்தான்
மக்களைக் கவர முடிந்து மக்கள்திலகமானார்
எம்ஜிஆர் அவர்கள்!

எப்படியும் வாழ்க்கையை வாழலாம்
என்றில்லாமல் இப்படித்தான் வாழ
வேண்டும் என்ற வரையறை வகுத்துக்
கொடுக்கிறார்.

" வல்லமை சேர நல்லவனாக வளர்ந்தாலே
போதுமடா..! " என்கிறார்.

தவறு நடப்பது வாழ்க்கையில் சகஜம். அதைத்
திருத்திட வேணும்..." என கவிஞர் வெகு
நேர்த்தியாகச் சொல்லுகிறார்.

"சிந்திச்சுப் பாத்து செய்கையை மாத்து - தவறு
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ தெரிஞ்சும்
தெரியாம நடந்திருந்தா - அது திரும்பவும்
வராமப் பாத்துக்கோ..."

- மக்கள் மனங்களைக் கவர்ந்த மந்திர வரிகள்!

பட்டுக்கோட்டை இட்டுக்கட்டிய பாடல்கள்
பலவால் நாடோடிமன்னன் நாட்டைப்
பிடிக்கும் மன்னனாக‌ மாற எம்ஜியாருக்கு
ஏதுவாயிற்று என்பது காலம்
காயப்படுத்தாத உண்மைகள்!

-ஆல்ப‌ர்ட்.

கல்யாணசுந்தரம் - 6


<>ப(பா)ட்டுக்கோட்டை

கல்யாணசுந்தரம்!<>

"திருட்டு நரிகள் குழி பறிக்குது....."

அல்லும் பகலும், மழையோ வெய்யிலோ,
நனைந்தும் கருகியும் நிலவெளியில்
பாடுபடுகிற விவசாயியும், விவசாயினியும்
தாங்கள் படும் இன்னல்களை மட்டுமே
சொல்லாமல் நம்பிக்கையையும் விதைப்பதாக
அமைத்துக் கவியாத்தவர் பட்டுக்கோட்டையார்!

" காடு வெளையட்டும் பெண்ணே - நமக்குக்
காலமிருக்குது பின்னே " - என்று ஆறுதலாகச்
சொல்லி நம்பிக்கைப் பூக்களைத் தூவுகிற
கவிஞர்,
எதிர்காலத்தை, " பட்ட துயரினி மாறும் - ரொம்பக்
கிட்ட நெருங்குது நேரம் " - என்கிறார்.

அதே நேரத்தில் " கஞ்சி கஞ்சி என்றால் பானை
நிறையாது, சிந்தித்து முன்னேற வேண்டுமடி" என்கிற
சித்தாந்தச் சிதறலை முன்னேற்றத்துக்கான முதல்
அடியாக முன் வைக்கிறார்.

ஓதுவார் தொழுவாரெல்லாம், உழுவார் தலைக்
கடையிலே, உலகம் செழிபதெல்லாம், ஏர்நடக்கும்
நடையிலே, ஆதி மகள் அவ்வை சொல்லை
அலசிப்பார்த்தா நெஞ்சிலே நீதியென்ற நெல்விளையும், நெருஞ்சிபடர்ந்ததரிசிலே!
என்கிற வரிகளில் அய்யன் திருவள்ளுவனின்
உழவு அதிகாரமும் அவ்வைப்பிராட்டியின்
ஆற்றங்கரையின் மரமும் ஒருங்கே சேர்ந்த
எளிமைக் கவிதையாக வடித்து வழங்கியிருக்கிறார்
மக்கள் கவிஞர்!

" சும்மா கெடந்த நிலத்தைக் கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி..." - என்கிற
வரிகளில் பொதிந்து கிடக்கும் பொருள் தான்
எவ்வளவு?
இந்த இரு வாக்கியங்கள் உழவுத் தொழிலின்
சூட்சுமத்தையே அடக்கி வாசிக்கும் வரிகளல்லவா?

மிகச் சாதாரணப் பாடலிலும் சமுதாய நோக்கு

மிளிரும். இலை மறை காயாக முகிழ்க்கும் படிக்காத
மேதை பட்டுக் கோட்டையின் பாடல்களில் பொருட்
செறிவும், சோடை போகாச்சொற்கட்டும் மிளிரும்.

தேமதுரத் தமிழில், படித்தவரும், பாமரரும் போற்றும்
வண்ணம் எழுதிக்குவித்தவர். இலக்கியம் பயிலாதவ
ரெனினும் சங்கத் தமிழ் சமைத்த பேராளர்களோடு
ஊறித் திளைத்த உன்னதக் கவிஞர்.

வள்ளுவம்...

வள்ளுவர் வகுத்த வழியில் நடை போட
சமூகத்துக்கு தனது கவிதையை தூது விட்ட
தென்றல் பட்டுக்கோட்டையார். " வள்ளுவப்
பெருமான் சொல்லிய வழியில் வாழ்வது
அறிவுடைமை..." என்றும் " நாணம் உண்டு
வீரம் உண்டு; நல்ல குறள் பாடல் உண்டு..." என்றும்

" வள்ளுவன் வழியிலே - இனி வாழ்க்கை ரதம்
செல்லுமே..." என்றும் " வள்ளுவரின் வழி வந்த
பெரும் பணி வாழ்வில் நன்மையுண்டாக்கும்,
தன் மானம் காக்கும்..." என்றும் ஆங்காங்கே
வள்ளுவத்தை வழிகாட்டியாக, கவிஞர்
கவிதாலங்காரம் செய்திருப்பதிலிருந்தே அவர்
வள்ளுவப் பெருமகனாரின் மீது கொண்டிருந்த
பற்றின் ஆழம் அறியமுடிகிறது.

பொறந்த மண்ணு...

"சுதந்திரத் தாயின் மகிழ்ச்சி" என்ற பாடலில்
நாட்டு விடுதலைக்காக அயராது உழைத்த
மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ்,
செக்கிழுத்தசெம்மல் வ.உ.சி., கொடிகாத்த
குமரன், தில்லையாடி வள்ளியம்மை, பாரதியார்
என்ற விடுதலை வீரர்களைப் பாடிய கவிஞர்,
பெற்ற சுதந்திரம் பேணிக்காக்கப்படாமல்
பேதலிக்கிற நிலை கண்டு மனங் குமுறுகிறார்.

" நீங்களெல்லாம் இன்றிருந்தால் தியாக வடுக்கள்
எல்லாம் கண்களாக்கித் தேசத்தை நனைத்திருப்பீர்!
பெரு வெயிலால் வண்டல் நிலம் வெடிப்பதுபோல்,
பிளவுபட்டுச் சுயநலத்தால் வருமான வேட்கையிலே
புகுவதன்றி மனதிலேதும் விசாலமுண்டா? " - என்று
தனது வேதனையை வெளிக்கொட்டுகிறார் கவிஞர்.

(இந்த இடத்தில் ஒரு பட்டுக்கோட்டையார் மட்டும்
இன்றிருந்தால் காசுக்காக திரைப்படப்பாடல்களை
அநியாயமாக ஆங்கிலக் கலப்பு செய்து கசாப்புக்கடை
நடத்தும் வாணிபக் கவிஞர்களை விரட்டியடித்திருப்பாரோ என்றெண்ணத் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை. )

மேலும், " எங்கே உண்மை என் நாடே?
ஏனோ மெளனம் சொல் நாடே?
மேலான செல்வம் வீணாகலாமா? - என்று
உளம் பதறிக் கேட்கிறார்.

" இது வீரர் பொறந்த மண்ணு, இதில் நாமெல்
லோரும் ஒன்று! - என்று மனித நேய ஒற்றுமைக்குக்
குரல் கொடுத்ததோடு, "
அன்பிருக்குது, அறிவிருக்குது பாரிலே,
எதை அழிக்க எண்ணித்
திருட்டு நரிகள் குழி பறிக்குது வேரிலே?" என்று
எச்சரிக்கை மணியையும் அடிக்கிறார்.

-ஆல்ப‌ர்ட்.

கல்யாணசுந்தரம் - 5

<>பா(ப)ட்டுக்கோட்டை

கல்யாணசுந்தரம்!<>

உழவனும் ஊராள்பவனும்...

" எழுதிப் படிச்சு அறியாதவன் தான் உழுது
உழைச்சு சோறு போடுறான்!
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்லா நாட்டைக் கூறு போடுறான்.

அவன் சோறு போடுறான்!
இவன் கூறு போடுறான்!.." நிதர்சனத்தை
எளிமையாக இதைவிட எழுதுகிற நேர்த்தி
இவனுக்கு மட்டுமே சாத்தியப்படிருந்தது.
நிலப் பிரபுத்துவ பூமியான தஞ்சைத்
தரணியைச் சேர்ந்தவர் கவிஞர் என்பதால்,
மிட்டா மிராசுகளின் கோரப்பிடியிலிருந்து
விவசாயிகளை மீட்டெடுக்கவே விவசாய
சங்கத்துடனும் பொதுவுடைமைக்
கட்சியுடனும் தன்னைப் பிணைத்துக்
கொண்டவர் கவிஞர்.

உழவனின் உள்ளக் கிடக்கை எப்படியிருக்கும்
என்பதை " ஏரோட்டும் ஏழை இதயங்
குமுறினால் போராட்டமே எழுமே.." என
முரசறைகிறார்.

" தேனாறு பாய்கிறது செங்கதிர் சாயுது,
ஆனாலும் மக்கள் வயிறு காயுது..." - என்ற
பாடலையும் எழுதி 1954ல் திண்டுக்கல் காந்தி
மைதனத்தில் நடைபெற்ற "கண்ணின் மணிகள்"
நாடகத்திலும் நடித்து வாழ்வில் வறுமையும்
துன்பமும் தந்த அனுபவங்களைச் சொல்லி
உழவனின் நண்பன் என்பதை நிரூபித்தார்.

இப்படித்தான் வாழவேண்டும் என்கிற
இலக்கின்றி எப்படியும் வாழமுடியும் என்கிற
வக்கிர எண்ணம் கொண்டோரை,

" குறுக்குவழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா -இது
கொள்ளையடிப்பதில் வல்லமை
காட்டும் திருட்டு உலகமடா -இதயம்
திருந்த மருந்து சொல்லடா " என்கிறார்.

நேர் வழியின்றி, குறுக்குவழியால் பணம்,
பதவி, சுகம் தேடுகிறார்கள்;
பதவி வந்த பிறகும், தங்கள் பதவியைக்
கொண்டு உலகிற்கு நன்மை செய்யாமல்
கொள்ளையடிப்பதில் தான் தங்கள்
திறமையைக் காட்டுகின்றனர்.
இப்படிபட்ட இதயம் திருந்த மருந்து
வேண்டும் என்கிறார்.

" திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது - அதைச்
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்
தடுத்துக்கொண்டே இருக்குது
திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்கமுடியாது. " -
அப்பட்டமாகச் சொல்லுகிறார் கவிஞர்.

சாதாரணமாக வீடு புகுந்து களவு செய்ப
வனுக்கும் பொருந்தும்; நாட்டையே சுரண்டிக்
கொழுக்கும் கூட்டத்துக்கும் பொருந்தும்.

இக் கவிதை, எவ்வளவோ சட்டங்கள்
திருட்டைத் தடுக்க இருந்தாலும், தனி
மனிதமாற்றமே சிறந்த விளைவை ஏற்படுத்த
முடியும் என்கிறார். பொதுவுடைமைச்
சிந்தனைப்பூக்களுக்குச் சொந்தக்காரரான
கவிஞர் மனதில்தான் எத்தனை விதமான
சிந்திப்புகள்!

" தனியுடைமைக் கொடுமைகள் தீரத் தொண்டு
செய்யடா, தானாய் எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா!..." என்கிறார்.

எல்லாரும் அதது, அது பாட்டுக்கு நடக்கும்
என்று எண்ணிவிடக்கூடாது.

ஒவ்வொரு
மனிதனும் சிந்திக்க வேண்டிய சித்தாந்தக்
கருத்தல்லவா?

அது மட்டுமா!

" இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப்
போனால் பதுக்கிறவேலையும் இருக்காது,
ஒதுக்கிற வேலையும் இருக்காது..."
- அரசோச்சுகிறவர்களுக்கு அச்சாரமாக இருக்க
வேண்டிய அப்பழுக்கற்ற சிந்தனையை
அசாதாரணமாகச் சொல்லுகிற கவிஞரின்
ஆற்றல் கண்டு எவர் வியக்காமலிருக்கமுடியும்?

-ஆல்ப‌ர்ட்.

கல்யாணசுந்தரம் -4


<>ப(பா)ட்டுக்கோட்டை

கல்யாணசுந்தரம்!<>

தொழிலாளி...முதலாளி..!

உழைப்பே உயர்வுதரும் என்பதில் ஆழ்ந்த
நம்பிக்கை கொண்ட கவிஞர், வெற்றி
என்கிற ஏணிப்படிகளில் ஏறிப்போன
தொழிலாளத் தோழர்களை பட்டியலிடுகிறார்.

பட்டியலோடு நிறுத்தாமல் அவர்கள் வாழ்வியல்
உயரவும் வழிசொல்லிக் கொடுக்கிறார்.

" வீரத் தலைவன் நெப்போலியனும் வீடு
கட்டும் தொழிலாளி ரஷ்ய தேசத்தலைவர்
மார்சல் ஸ்டாலின், செருப்புத் தைக்கும் தொழிலாளி!

விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு காரு ஓட்டும்
தொழிலாளி!

விண்வொளிக் கதிர் விவரம் கண்ட, சர்.சி.வி.இராமனும்
தொழிலாளி!

படிப்பும் தேவை - அதோடு உழைப்பும் தேவை -
முன்னேற படிப்பும் தேவை - அதோடு உழைப்பும்
தேவை. " - என்று சொல்லி தொழிலாளிக்கு
நெஞ்சுரமூட்டுகிறார்.

இதேபோல காந்தி கனவு கண்ட கிராமங்களில்
தொழிலாளர்களின் நிலையை அப்பட்டமாகச்
சொல்லி ஆவேசம் கொள்ளச்செய்கிறார்...
இந்தவரிகளில்..."

புகையும் நெருப்பிலாமல் எரிவது எது?

பசித்து வாடும் மக்கள் வயிறு அது!
என்று வாழும் வரலாறாக இருக்கிற
கிராமங்களின், வறுமையும் வாழ்வும்
பின்னிப் பிணைந்து கிடக்கிற அவலத்தை
உடைத்து நொறுக்குகிற வரிகள்.

அதே நேரத்தில் வர்க்க முரண்பாட்டைச்
சுட்டும்போது , " வசதியிருக்கிறவன் தரமாட்டான்,
வயிறு பசிக்கிறவன் விட மாட்டான்.." என்று
உழைக்கும் தொழிலாளரின் உள்ளக் குமுறலை
வெளிபடுத்தவும் செய்கிறார்.

" நல்லவர் போல உலக மீது நரியும் கழுகும்
உலவும்போது நம்மை இன்பம் நாடி வருமா?
ஏமாத்துப் போர்வையிலே ஏழைகளின்
வேர்வையிலே எக்காளம் போடுகிற கூட்டம்...
மக்கள் எதிர்த்துக்கிட்டா எடுக்கணும் ஓட்டம்!..
என்று மக்களுக்கு போர்க்குணத்தை ஊட்டுகிறார்.

துணிந்தால்தான் வாழ்வு இனிக்கும் இல்லை
யென்றால் துன்பங்கள்தான் என்பதை,
" துணிந்தால் துன்பமில்லை; சோர்ந்துவிட்டால்
இன்பமில்லை." என்கிறார்.

சமூக ஏற்றத் தாழ்வினை " பசி பட்டினி நோய்
நொடி நிரம்பியது, வாழும் உலகம் வஞ்சக உலகம்..."
என்றும்
" அதிகமாகச் சேர்த்துக்கிட்டு அல்லும் பகலும்
பார்த்துக்கிட்டு இருப்பவர் உண்டு" என்றும்
" உலகத்தை நினைத்தாலே உடம்பு நடுங்குது,
ஊருகெட்ட கேட்டைப் பார்த்து நீதி தூங்குது..!"
என்றும் நாட்டு நடப்பைக் கண்டு பதறுகிறார் கவிஞர்.

இது உலகம் உள்ளளவும் பொருந்தும் தத்துவ
முத்துக்கள் அல்லவா?

-ஆல்ப‌ர்ட்.

கல்யாணசுந்தரம் - 3

ப(பா)ட்டுக்கோட்டை

கல்யாணசுந்தரம்!

ஆயுதம்...

பட்டுக்கோட்டையார், தமிழ்தாயின் இரத்த
நாளங்களில் இன்றும் உயிர்த் துடிப்பாய்
உலவிக் கொண்டிருக்கிற உன்னதக் கவிஞன்.

பட்டிதொட்டியெல்லாம் அவனது அடிமனத்து
நாதங்களை அசை போட்டு மனம் குதூகலித்துக்
கும்மாளமிட வைக்கிற ஒப்பற்ற கவிஞன்.

கிராமப்புறங்களில் ஒரு சடங்கு, கல்யாணம்
காச்சின்னா மைக்செட் இல்லாம எந்த விசேசமும்
நடக்காது.கிராமத்து மண்வாசணை மணக்கும்
அவன் பாடல்கள், "நாள் முழுக்க வயலில் குனிந்து
வேலைசெய்து கூன்விழுந்த களைத்துப்போன
இதயங்களைக்கூட நிமிர்ந்து உட்கார்ந்து ரசிக்கச்
செய்யும் ஆற்றல் படைத்தது மக்கள் கவிஞரின்
பாடல்வரிகள்!

அவனுடைய கவிதைகளுக்கு ஆன்றோரின்
விளக்கவுரையோ, தெளிவுரையோ தேவையில்லை.
அதனால்தான் காலத்தை வென்ற அவனது
கவிதையை கிராமத்துச் சாதாரணனும்
அசாதாரணமாக வாய்ப்பாட்டாய் பாடிப்
பவனி வருகிறான்.

" நெல்லுக்குள் அரிசி" இருக்கிறது பரம
இரகசியமா?
ஆனாலும் அரிசி தானிருக்கிறது என்று அடித்துச்
சொல்ல நம்மவர்களுக்கு தேவைப்பட்ட
காலப்பெட்டகம் கண்டெடுத்த கோமேதகம் அவன்!

அவனுடைய கவிதை வரிகள் ஆயிரமாயிரம்
நூற்றாண்டுகள் அழிந்து தோன்றினாலும் முலாம்
பூசப்படாத உண்மைகளாய் உலா வரத் தகுதியானது!

காரல் மார்க்சும், ஏங்கெல்சும் உலகுக்கு அளித்த
பொதுவுடமைப் பேரறிக்கையில்,
" உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்; நீங்கள்
இழக்கவேண்டியது சங்கிலிகளைத் தவிர வேறொன்றும்
இல்லை... " என்று சொல்லப்பட்ட தத்துவம் மக்கள்கவிஞனின்,

" காடு வெளஞ்சென்ன மச்சான் - நமக்குக் கையும்
காலும்தானே மிச்சம் " என்கிற ஈரடி, படிக்காத
பாமரனுக்கும் புரிந்து போகிற எளிய, ஆனாலும்
வைர வரிகளில்லையா?

வினாவும் விடையுமாக கவிஞர் நிகழ்த்தும்
சொல்லாட்டங்களில் சொக்கிப் போக வைக்கிற
சொகம் இருக்கிறதே... அந்த வார்த்தைகளின்
வசீகரிப்பிற்குள் மக்கள் சொக்குப் பொடி
போட்டதுபோல சொக்கித்தான் போனார்கள்.

எதார்த்தமான வார்த்தைகள் என்றாலும் சீரிய
சிந்தனைக்குச் சொந்தக்காரர் என்பதை
சொல்லாமல் சொல்லும் வரிகள் இவைகள்:-

" உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
கண்டம் விட்டுக் கண்டம் பாய்கிற ஏவு
கணையோ?! அடியோடு நாசம் செய்கிற
அணுகுண்டோ?

அற்புதமாக விடை பகருகிறார்.
"நிலை கெட்டுப் போன நயவஞ்சகரின்
நாக்குதான்... அது! என்னே ஒரு ஆழ்ந்த கருத்து!

-ஆல்ப‌ர்ட்.

கல்யாணசுந்தரம்! - 2

ப(பா)ட்டுக்கோட்டை

கல்யாணசுந்தரம்!

வளர் பிறையாய்....


பள்ளிப் படிப்பைக்கூட பூர்த்தி செய்ய
இயலாத பட்டுக்கோட்டையார்,
பாட்டுக்கோட்டையாராய் வலம் வர
அவருக்குவாழ்க்கைப்பள்ளி ஏராளமான
கல்வியை வாரி வழங்கியதும் ஒரு காரணம்.

பாவேந்தர் பாரதிதாசனின் பாசறையில் பயின்ற
பட்டுக்கோட்டையார் விவசாயியாக, மாடு மேய்ப்பவராக,
மாட்டு வியாபாரியாக, மாம்பழ வியாபாரியாக,
இட்லி வியாபாரியாக, முறுக்கு வியாபாரியாக,
தேங்காய் வியாபாரியாக, தென்னங்கீற்று வியபாரியாக,


மீன் பிடிக்கும் தொழிலாளியாக, உப்பளத் தொழிலாளியாக,
ஓட்டுநராக, தண்ணீர் வண்டிக்காரராக, அரசியல்வாதியாக,
பாடகனாக, நாடக நடிகராக, நடனக்காரராக... என்று
வாழ்க்கையின் வறுமை களையப் போராடிய கல்யாணம்
1951ல் கவிதை வானில் கவிஞனாக உலாப் புறப்பட்ட
நிலாவானார்.

திரைப்படப் பாடல்களால், வளர் பிறையாய்
வலம் வந்த பட்டுக்கோட்டையார் பெளர்ணமியாய்
பிரகாசித்துத் தேய்பிறை காணாமல் திடீரென
அமாவாசையிருளாக மறைந்து போனார்.
ஆனால் இன்றும் அவர் பாடல்கள் வளர் பிறையாய்..!

கவிஞன் என்பவன்...

சமுதாயத்தின் அவலம், சீர்கேடுகள், அக்கிரமம்

கண்டு பொங்கி எழுந்து தம் எழுத்துத் திறத்தால்
அக்கினியை பிரசவிக்கிறவன்தான் கவிஞனாக
இருக்கமுடியும்; எதுகைமோனையோடு வார்த்தை
களைப் பொறுக்கி எழுதுவதற்குப் பெயர் கவிதையா?

சிவந்து, செங்கதிர் விரித்துச் சூரிய ரதம்
கிளம்புகிறதைவிட நாம் என்ன அழகாக
எழுதிவிடப் போகிறோம்?

நீல வானக் கம்பளத்தில் இரைந்து கிடக்கும்
வைர நட்சத்திரங்களிடையே முகிழ்த்துப்
பவனி வரும் பால்நிலவைவிடவா அழகான கவிதை வடித்துவிடப்போகிறோம்?

எங்கோ ஏற்பட்ட இழப்புகளுக்கும், யாராருக்கோ
நடந்த தீங்குகளுக்கும், அவற்றைத் தனக்கே
ஏற்பட்ட பாதிப்பாகக் கருதி அதற்கு விடை
தேடுகிற பாங்கினைப் பெறுபவனே கவிஞன்.

வலுவிழந்த வார்த்தைகளுக்குள் தன்னைக்
சிறைப்படுத்திக்கொள்ளாமல், சமுதாயக்
களைகளை வெட்டிச் சாய்க்கிற எழுத்து
வாளாய் மிளிர்கிறவனே கவிஞன்!

இப்படிப்பட்ட அழுத்தமான அடயாளங்களைக்
கொண்டவன்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

இது காலத்தால் கரைந்து போகாத உண்மை.

-ஆல்ப‌ர்ட்.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

கல்யாணசுந்தரம்!

யார் இந்தக் கல்யாணசுந்தரம்?
அவர் பெயரைச்சொல்வதைவிட
ஊரைச் சேர்த்துச் சொன்னால்
அறியாதார் எவரும் இருப்பரோ?

" ஞாலத்திலே நம்ம மனம் தமிழ் இனத்தின்

குலத்தைக் காக்க வேண்டும்..." " அகிலம்
போற்றும் தமிழறம் வாழ்க! "
என்று தமிழ் வாழப் பாடிய கவிஞன் அவன்!

பட்டுக்கோட்டையார் திரைப்படக் கவிஞர்தாம்;

ஆனாலும் மெட்டுக்குப் பாட்டு எழுதியவரில்லை!

பட்டுக்கோட்டையார் பாமரர் கவிஞர்தாம்;

ஆனாலும் ஆகாயத்தையும் அகலமாக்கிவிடுகிற
அறிவிற்சிறந்தவர்!

பட்டுக்கோட்டையார் எளிமையாகப்
பாடியவர்தாம்; ஆனாலும் வலிமையான
கருத்துக்களுக்கு உருக் கொடுத்தவர்!

பட்டுக்கோட்டையார் பாட்டாளிகளுக்காகப்
பாடியவர்தாம்; ஆனாலும் பட்டதாரிகளிலும்
பண்பட்ட சிந்தனையாளர்!

பட்டுக்கோட்டையார் லட்சியங்களுக்காகப்
பாடியவர்தாம்; ஆனாலும் காசுக்காக சிறகு
விரிக்காத கவிக்குயிலவர்!

ஆம்!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற
கவிஞனை நினைவு கூர்ந்திடும் வகையில்
ஒரு சிறு தொடரை உங்களோடு
பகிர்ந்துகொள்கிறேன்.


மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை

கல்யாணசுந்தரம். ( 1930 -1959 )"

" தமிழ் மொழிக்கு அழியாத உயிரும்
ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து
காவியங்கள் செய்யப்போகிற வர கவிகளுக்கு....
- எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து

கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும்
மெட்டு, இவற்றினையுடைய காவியமொன்று
தற்காலத்திலே செய்து தருவோன் நமது
தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்.

ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ்

மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி
எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறை
படாமலும் நடத்தல் வேண்டும்..." என்று பாட்டுக்கொரு
புலவன் பாரதி 1912ம் ஆண்டு பாஞ்சாலி சபதத்தை
படைத்தளிக்கப் போகுமுன் கோரிக்கை விடுக்கிறான்.

இதற்குப் 18 ஆண்டுகளுக்குப் பிறகு 1930ம் ஆண்டு

ஏப்ரல் 13ல் பிறந்து பாரதியின் கனவுக்கு உருவம் கொடுத்த கவிஞன்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

-ஆல்ப‌ர்ட்.